சென்னை, ஏப்.7,2011
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீரி எனும் நிறுவனம் இன்று இரண்டாவது நாளாக ஆய்வு நடத்தியது.
இந்நிறுவனத்தின் நிபுணர் குழுவுடன் மதிமுக பொதுச்செயலர் வைகோவும் இணைந்து சுற்றுச்சூழல் கேடு குறித்து ஆய்வுசெய்தார். முன்னதாக, ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுவதால் அதை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஸ்டெர்லைட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணையின்போது ஆலையை முழுமையாக மூட வேண்டும் என வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார்.
இதையடுத்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் கழிவுகள் குறித்து நீரி என்னும் நிறுவனம் ஆய்வு நடத்தி 8 வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி நீரி நிறுவனம் சார்பில் இன்றும் நாளையும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடைபெறுகிறது. இந்த ஆய்வில் கலந்துகொள்ளுமாறு வைகோவுக்கும் நீரி நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது.
இதை ஏற்று நீரி நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் வைகோவும் சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் நேற்றும் இன்றும் ஆய்வு நடத்தினார்.

No comments:
Post a Comment