Friday, April 15, 2011

மீனவர்கள் உயிர்பலிக்கு மத்திய அரசே பொறுப்பு: வைகோ ஆவேசம்



ராமேஸ்வரம்: ""இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் நான்கு பேரின் உயிர்பலிக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் ,''என, ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 2ல் மீன்பிடிக்க சென்று படகுடன் காணாமல் போன நான்கு மீனவர்களில் விக்டஸ் உடல் இலங்கை கடற்கரை, ஜான்பால், அந்தோணிராஜ் உடல்கள் தொண்டி கடற்கரையில் ஒதுங்கின. இவர்களுடன் சென்ற மீனவர் மாரிமுத்துவின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. பலியான மீனவர்கள் வீட்டிற்கு வந்த ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ , உறவினர்களிடம் ஆறுதல் கூறினார். மீனவர்களின் குடும்பத்திற்கு கட்சி நிதியிலிருந்து தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கிய அவர்,""அந்தோணிராஜ் மனைவி சாலியாவை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்வதற்கான செலவை தானே ஏற்று கொள்வதாக ,'' தெரிவித்தார். மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன், இளைஞர் அணி துணை செயலாளர் கார்கண்ணன், மண்டபம் ஒன்றிய செயலாளர் பேட்ரிக், மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன்(ராமநாதபுரம்) சண்முக சுந்தரம்(விருதுநகர்) செவந்தியப்பன் (சிவகங்கை) பூமிநாதன் (மதுரை) சந்திரன்(தேனி) மற்றும் நிர்வாகிகள் உடன் வந்தனர்.

தொடர்ந்து நிருபர்களிடம் வைகோ கூறியதாவது: மீனவர்கள் பலியான சம்பவம் நடந்த ஏப்.2 ல் இரவில், மீன்பிடித்த மீனவர்களிடம்," கிரிக்கெட்டில் இலங்கை தோற்றால் நடப்பதே வேறு ,' என, இலங்கை கடற்படையினர் மிரட்டியுள்ளனர். அன்று இரவுதான் நான்கு மீனவர்களும் காணாமல் போனர். இவர்களை இலங்கை கடற்படையினர்தான் கொலை செய்து கடலில் வீசி உள்ளனர். தமிழக மீனவர்களுக்கு நடுக்கடலில் நடக்கும் கொடுமையான உயிரிழப்புகளை தடுக்க ,மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை கடற்படையினரின் தாக்குதல் குறித்து, இலங்கை அரசுக்கு மத்திய அரசு எவ்வித எச்சரிக்கையும் செய்யவில்லை. யாழ்பாணத்தில் மீட்கப்பட்ட மீனவர் விக்டசின் உடலில் 16 இடங்களில் காயம் இருந்ததாக அடையாளம் காண சென்ற உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மீட்கப்பட்ட மீனவர்களின் ஒருவருக்கு ஒரு கை வெட்டப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். இதிலிருந்தே நால்வரையும் இலங்கை கடற்படையினர் கொலைசெய்துள்ளது உறுதியாகிறது. இதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இந்நிலை நீடித்தால்,"" இந்திய அரசு எங்கள் அரசு இல்லை'' என, தமிழக மக்கள் கூறும் நிலை உருவாகும் , என்றார்.

நரிக்குடி: நரிக்குடி அருகே ஒட்டங்குளத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் ராமேஸ்வரத்தில் மீன் பிடிக்கும் தொழில் செய்கிறார். கடந்த வாரம் ராமேஸ்வரம் கடலில் மீன் பிடிக்க சென்ற நான்கு மீனவர்கள் காணாமல் போயினர். இவர்களில் மூன்று பேரின் உடல் கிடைத்தது. மாரிமுத்து என்ன ஆனார் என்று தெரியவில்லை. இவரது குடும்பத்திற்கு ம.தி.மு.க., செயலாளர் வைகோ நேரில் ஆறுதல் கூறி ரூ.25 ஆயிரம் வழங்கினார். விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க., செயலாளர் சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர் அன்பழகன், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நன்றி..தினமலர்

No comments:

Post a Comment