Tuesday, March 29, 2011

இரும்புத் திரைக்குள் மாட்டிக் கொண்டுபால்கனி அரசியல் நடத்தும் ஜெ.,!வெடிக்கிறார் நாஞ்சில் சம்பத்


வைகோவின் மனசாட்சி எனும் அளவுக்கு, அவருடன் நகமும் சதையுமாக இருப்பவர் சம்பத். 2006ல் தி.மு.க., கூட்டணியில் இருந்து, ம.தி.மு.க., வெளியேறும் முன்னரே, தன் மேடை முழக்கங்கள் மூலம் அதை கட்டியம் கூறியவர். இம்முறையும், விரிசல்கள் வெளியில் தெரியும் முன்னரே, அ.தி.மு.க., தலைமையை தஞ்சைத் தரணியில் போட்டுத் தாக்கிவிட்டார். அவர் சொன்னது போலவே அமைந்தன முடிவுகள்.

அடுத்தது என்ன?இப்படி ஒரு அதிர்ச்சி முடிவு எடுத்திருப்பது சரி தானா?
இது கிறிஸ்துவர்களுக்கு மட்டுமல்ல... ம.தி.மு.க.,வினருக்கும் தவக்காலம் தான். ஏப்ரல் 11ம் தேதி மாலை 5 மணிக்கு, வைகோவின் தவம் கலையும். எங்கள் மவுனம் வலிமையானது. அமெரிக்காவின் சிகாகோ நகரில், மேதின நினைவரங்கில், "சப்தத்தை காட்டிலும் மவுனம் வன்மையானது' என்ற பொன்மொழி எழுதிவைக்கப்பட்டுள்ளது. மவுனம் வன்மையானது என்பதை, தமிழக தேர்தல் முடிவுகள் ஊருக்கு உணர்த்தும். ஆயிரம் கூட்டங்களில் பேசினாலும் வைகோவிற்கு கிடைத்திராத மரியாதை, தற்போதைய மவுனத்தால் ம.தி.மு.க., பெற்றிருக்கிறது.ஒரு புதிய திசையை நோக்கி எங்கள் பயணம் தொடர்வதற்கு, ஒரு வாசலை திறந்து வைத்த ஜெயலலிதாவை, வாசனை மலர்களைத் தூவி வணங்குகிறேன்.

ஜெயலலிதாவின் இந்த முடிவால் அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் எங்களுக்கு அனுதாபமும், தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் எங்களுக்கு கவுரவமும், பொதுமக்கள் மத்தியில் எங்கள் மீது பட்சாதாபமும், உலகத் தமிழர்கள் மத்தியில் ஒரு நன்மதிப்பும் ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் ஜார் மன்னனை வீழ்த்துகிற புரட்சிக்கு அடித்தளம் அமைத்த மாவீரன் லெனின், "முன்னே ‌செல்ல ஒரு காலடி தூரம் எடுத்து வைக்க இடம் கிடைத்தால் போதும்' என்றான். ம.தி.மு.க.,வின் 17 ஆண்டுகால பயணத்தில், எங்களுக்கு முன்னே செல்ல, இப்போது ஒரு அடி எடுத்து வைக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

துப்பாக்கியின் ஓசையை விட அதிகமாகவும், பூகம்பத்தின் சீற்றத்தை விட அதிகமாகவும், புயலின் வேகத்தைவிட வேகமாகவும் எங்கள் பயணத்தை மேற்கொள்வோம். தமிழகத்தில் இதுவரையிலும் மாற்றுக் குறையாத சக்தியாக இருந்த நாங்கள், இனி மாற்று சக்தியாக மாறுவோம். "அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் நான் தான் மாற்று அணி' எனக் கூறிவந்த கேப்டன், இப்போது சிப்பாய் ஆகி சீரழிகிறார்.ஒருவேளை அ.தி.மு.க., அதிகாரத்திற்கு வருமானால் ஜெயலலிதா, தி.மு.க.,வை எல்லா தளங்களிலும் தீர்த்துக் கட்டுவார். தி.மு.க., ஆட்சிக்கு வருமானால், அ.தி.மு.க.,விற்கு முடிவுரை எழுதுவர். இந்தத் தேர்தல் முடிவில், இரண்டு தீயசக்திகளில் ஏதாவது ஒரு தீயசக்தி அழியப் போகிறது என்பது மட்டும் உண்மை. ஒரு சக்தி அழியும் போது, இட்டுநிரப்புகிற அரசியல் ஆளுமையும், அதற்கான ஆற்றலும், தமிழக அரசியலில் வைகோவிற்கு மட்டும் தான் உண்டு.

தமிழகத்தில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஜாதிக்கட்சிகளை நம்பித்தான் களத்தில் நிற்கின்றனர். தமிழக அரசியலில் எங்கள் வியர்வை, அடுத்தவர்களின் பாசனத்திற்கு பயன்பட்டிருக்கிறது. நாங்கள் விதைத்தோம்; ஆனால் அறுக்கவில்லை. நாங்கள் நெய்தோம்; ஆனால் உடுத்தவில்லை. நாங்களே நெய்து நாங்களே உடுத்தவும்; நாங்களே விதைத்து நாங்களே அறுக்கவும், காலம் ஒரு சந்தர்ப்பத்தை வைகோவிற்கு வழங்கியிருக்கிறது.அ.தி.மு.க.,வில் நடப்பதை வைகோவால் எப்படி கணிக்க முடியாமல் போனது?ஜெயலலிதாவின் இந்த முடிவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நம்ப வைத்து கழுத்தறுக்கும் நயவஞ்சகத் தன்மையை, எங்களால் முன்கூட்டியே உணர முடியவில்லை. தொகுதிப் பங்கீடு குறித்து பேசிய அ.தி.மு.க., குழுவினர் ஆறு இடங்களைத் தான் தரமுடியும் என்றனர். வாதத்திற்கு கேட்பதானால், 1996 தேர்தலில் அ.தி.மு.க., நான்கு இடங்களில் தான் வெற்றி பெற்றது. எனவே, நீங்கள் நான்கு இடங்களை வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூற முடியுமா?

தூத்துக்குடி தனியார் ஆலை நிர்வாகம் தான் ம.தி.மு.க.,வை கூட்டணியில் இருந்து கழற்றிவிட பல கோடிகள் தந்ததாக பேச்சு எழுகிறதே?
கப்பலோட்டிய தமிழன் வாழ்ந்த தூத்துக்குடியில், அபாயத்தை கக்குகிற ஸ்டெர்லைட் நச்சு ஆலை இயங்கி வருகிறது. அந்த ஆலையில் கசிவு ஏற்பட்டால், அதை சரி செய்ய தொழில்நுட்ப வசதிகள் இந்தியாவிலேயே இல்லை. அறிவியல் துறையில்முன்னேறிய ஜப்பான் நாடே அணுக்கசிவால் திக்குமுக்காடுகிறது. எனவே தான், அந்த ஆலைக்கு எதிராக ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கு நடைபயணம் சென்றோம். ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். வைகோ நேரடியாக ஆஜராகி வாதாடினார். தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் வரை ‌சென்று, அந்த ஆலையை இழுத்து மூட உத்தரவுகள் பெற்றோம்.

அந்த நாசகார கும்பலால் வைகோவை இழுக்கவும் முடியவில்லை; ஈர்க்கவும் முடியவில்லை. எனவே வைகோவின் குரல் சட்டசபையில் ஒலிக்க இருப்பதைத் தடுப்பதற்காக, அந்த நிறுவனத்தின் பணம் பல கோடி ரூபாய், போயஸ் தோட்டத்து சீமாட்டியிடம் சிக்கிக் கொண்டது. பணத்திற்கு அரசியல் செய்யாத, குணத்திற்கே அரசியல் செய்கிற வைகோ, திட்டமிட்டு வெளியேற்றப்பட்டார். "தொட்டான் பாஞ்சாலியை... கெட்டான் துரியோதனன்' என்பதைப் போல, "விட்டார் வைகோவை, கெட்டார் ஜெயலலிதா' என்பதைத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும்.

ம.தி.மு.க., மற்றும் வைகோ ஆதரவாளர்களின் ஓட்டு யாருக்கு என்பதை எப்போது சொல்வீர்கள்?
யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பது, வைகோவின் ஆதரவாளர்களுக்குத் தெரியும். காங்கிரசுக்கு பதிலடி தர வேண்டும் என 63 தொகுதிகளில் களம் இறங்கினால், அங்கு ஓட்டுகள் சிதறி காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடும். தனியாக போட்டியிட்டால், யாரிடமாவது பெட்டி வாங்கி போட்டியிடுகின்றனர் என, பெட்டி வாங்கியே பழக்கப்பட்டவர்கள், எங்கள் மீது பழி öŒõல்லக்கூடும். நாங்கள் காசற்றவர்கள் மட்டுமல்ல... மாசற்றவர்கள். எனவே தான், ம.தி.மு.க.,விற்கு புதிய வலுவும், பொலிவும் களம் காணாமலேயே வசமாகியிருக்கிறது. வைகோ தமது முடிவை ஏப்ரல் 11ம் தேதி மாலையில் அறிவிப்பார்.

"புறக்கணிக்க வேண்டாம்' என இன்று குரல் கொடுக்கும் கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க.,விற்கு உரிய சீட்டை வழங்கும்படி ஜெ.,விடம் பேசவில்லையே என்ற வருத்தம் உள்ளதா?
"நோ காம்ப்ரமைஸ்' என கூறிக் கொள்ளும் கம்யூனிஸ்ட்கள், ஒரே நாளில் ஜெயலலிதாவிடம் சரணாகதி அடைந்ததை, இந்த நாடு பார்த்தது. எனவே தான், கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து மூன்றாவது அணிக்கு முயற்சிக்கும் விஷப் பரீட்சையில் வைகோ இறங்கவில்லை. எங்களை நாங்களே சுத்திகரித்துக் கொள்ளவும், புதுப்பித்துக் கொள்ளவும், சுய பரிசோதனை செய்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

எங்களது சீட்களுக்காக கம்யூனிஸ்ட்களாவது ஜெயலலிதாவிடம் பேசுவதாவது... இரும்புத் திரைக்குள் மாட்டிக்கொண்டு பால்கனி அரசியல் நடத்தும் அந்த அம்மையாரைச் சந்திப்பதும், கருத்து தெரிவிப்பதுவும் விஜயகாந்தோ, கம்யூனிஸ்ட் தலைவர்களோ அல்ல, ஐ.நா., சபை தலைவர் பான் கீ மூனால் கூட முடியாத விஷயம். அப்படியே கம்யூனிஸ்ட்கள் அந்த அம்மையாரிடம் கேட்டாலும் கூட, எதுவும் நடந்திருக்கப்போவதில்லை.

வைகோ குறித்து ஜெ., உருக்கமான அறிக்கை வெளியிட்டாரே?கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு முறையாக சீட் ஒதுக்கும் முன், 160 தொகுதிகளுக்கும் தான்தோன்றித்தனமாக வேட்பாளர்களை அ.தி.மு.க., அறிவித்தபோதே எங்களுக்கான கதவு சாத்தப்பட்டுவிட்டதை உணர்ந்தோம். ஜெயலலிதாவின் அறிக்கையில் வைகோவின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இல்லையே. எனவே, இது திட்டமிட்டுத் தான் நடக்கிறது என்பதை புரிந்து கொண்டோம். நாங்கள் கண்ணீர் வடிப்பதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால், "கண்ணீரோடு விதைப்பவர்கள்; கம்பீரத்தோடு அறுவடை ‌செய்வர்' எனும் விவிலியத்தின் வரிகள், தேர்தல் முடிவுகளின் போது அம்மையாருக்கு உணர்த்தும். சிறைச்சாலை செல்வது மட்டுமல்ல தியாகம்.

இது போல அவமானங்களை தாங்கிக் கொள்வதும் தியாகம் தான். எங்களை அவமானப்படுத்திவிட்டதாக அவர்கள் மகிழ்ச்சியடையலாம். ஆனால் அவர்களின் கணக்கை முடிக்கிற காலம் எங்களுக்கு வரும். வைகோ வெல்வது உறுதி... வரலாற்றுக்கு இல்லை மறதி. வைகோவின் விஸ்வரூபத்தை இனிமேல் தான் பார்க்கப் போகிறோம்.""கம்யூனிஸ்ட்கள், ஒரே நாளில் ஜெ.,விடம் சரணாகதி அடைந்ததை, இந்த நாடு பார்த்தது. எனவே தான், அவர்களுடன் இணைந்து மூன்றாவது அணிக்கு முயற்சிக்கும் விஷப்பரீட்‌சையில் வைகோ இறங்கவில்லை''

நன்றி: தினமலர்

No comments:

Post a Comment