Wednesday, March 30, 2011

தி.மு.க-வின் கெளரவம்.. அதி.மு.க-வின் அனுதாபம்.. ம.தி.மு.க-வின் வளர்ச்சி..

நாடு சுற்றும் நாஞ்சில் சம்பத் கணிப்பு!

''இந்தத் தேர்தலில் நாங்கள் கண்ணீரை விதைத்து இருக்கிறோம். 'கண்ணீரை விதைத்தவர்கள் கம்பீரமாக அறுவடை செய்வார்கள்’ என்பார்கள். வானம் அழுதது... மழை பிறந்தது. சிப்பி அழுதது... முத்து பிறந்தது. மலர் அழுதது... தேன் பிறந்தது. வைகோவின் வாஞ்சை மிகுந்த சகாக்களாகிய நாங்கள் அழுகிறோம்... சீக்கிரமே வெற்றி பிறக்கும்!'' - வலியையும் வலிமையையும் ஒருசேரச் சொல்கிறார் நாஞ்சில் சம்பத்.

 ''பேட்டி...'' என்றதும், ''மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே நிற்கிறேன். வர முடியுமா?'' எனக் கேட்டார். தேர்தல் களத்தில் வைகோவின் வலது கரமாகச் சுற்றிச் சுழலவேண்டியவர், கடற்கரையில் காற்று வாங்க நிற்பது காலம் செய்த கொடுவினை!

மனதில் தோன்றியதைப் பகிர்தலாகச் சொன்னபோது, ''கொடுவினை செய்தது காலம் அல்ல... கூட்டணித் தலைமை! இத்தனை ஆண்டு காலம் எவ்வித நெருக்கடியும் கொடுக்காமல் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்தோமே... அந்த நேர்மைக்குக் கிடைத்த நெருக்கடி. சமயம் பார்த்துக் கிடைக்கிற இடத்தில் துண்டுபோடவும், யாரையும் துண்டு போடவும் தெரியாத எங்களின் சாலச்சிறந்த தலைவனுக்கு அரசியல் அற்பர்கள் கொடுத்த பரிசு!
ஆனாலும், கல்லூரிக் காலத்தில் இருந்து என் தலைவனுக்கு ஆட்பட்டவனாகச் சொல்கிறேன். வைகோ இப்போது அடைந்திருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர் இப்போது அனுபவிக்கும் குதூகலத்தை இதுவரை நான் கண்டது இல்லை. உத்வேகமான உற்சாகம் அவரிடம் கொப்பளிக்கிறது. புதிய சமவெளிக்கு - பூலோக சொர்க்கத்துக்கு வந்ததுபோல், எங்கள் தலைவர் எழுச்சி பெற்று இருக்கிறார். எத்தகைய இக்கட்டுகளையும் ஒரு நொடியில் இறக்கிவைத்து புத்தெழுச்சி பெற, தாயின் தலைமாடு போதும் என் தலைவனுக்கு!'' என்கிறார் சம்பத்!

''அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலக வேண்டிய கட்டாயத்தின் உண்மையான பின்னணி என்ன?''
''கடந்த தேர்தலில் இருந்து கூட்டணியில் அங்கம் வகிக்கும் எங்களை முதல் ஆளாகக் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குக் கூப்பிடாதபோதே, எங்களுக்குள் சிறு சந்தேகம் எழுந்தது. 'வைகோவைக் கூட்டணியில் வைத்திருக்காதீர்கள்’ என்பது கடல் கடந்து வந்த கட்டளை என்றே தோன்றுகிறது. அதேபோல், ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராகத் தலைவர் வைகோ நடத்தும் சட்டப் போராட்டமும் பலரை சங்கடத்தில் ஆழ்த்தியது. ஸ்டெர்லைட் நிறுவனர் அகர்வால், தலைவர் வைகோவிடம் பல விதங்களிலும் சமாதானத்துக்கு மெனக்கிட்டார். தலைவர் எந்த விமானத்தில் செல்கிறார் என்பதை அறிந்து பக்கத்து ஸீட்டில் பய​ணித்து, 'ஐந்து நிமிடங்கள் உங்​களோடு பேச வாய்ப்புக் கொடுங்​கள்!’ எனக் கெஞ்சினார். ஆனாலும், அந்த நச்சு ஆலையை மூடும் முடிவில் கொஞ்சமும் பின்வாங்காத தலைவர், அதற்கு மறுத்துவிட்டார். சிங்கள அதிபர் ராஜபக்ஷே, 'ஸ்டெர்லைட்’ அகர்வால் உள்ளிட்ட இன்னும் சில பண முதலைகள் அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிப்பதை உடைக்கத் துடித்தன. அப்படி எல்லாம் எதுவும் நடக்காது என நாங்களும், எங்கள் தலைவரும் நம்பினோம். ஆனால், அந்த நம்பிக்கையை அம்மையார் தவிடுபொடியாக்கிவிட்டார்!

எங்களைக் கூட்டணியில் வைத்திருக்கக் கூடாது என்பதற்காகவே 6 தொகுதிகள் ஒதுக்குவதாகப் பேச்சுவார்த்​தையை ஆரம்பித்தார்கள். எங்கள் தகுதிக்கும் தகவுக்குமான ஒதுக்கீடா அது? கூட்டணியில் இருந்து எங்களைத் தலையைப் பிடித்துத் தள்ளவே அவர் நினைத்தார். மொத்தத்தில், 'ஜெயலலிதா பணத்துக்கு அடிமை. தலைவர் வைகோ குணத்துக்கு அடிமை’ என்பதை இந்தத் தேர்தல் களம் உலகுக்குத் தெரிவித்துவிட்டது!''

''திட்டமிட்டு ம.தி.மு.க-வை விரட்டிய ஜெ., பிறகு ஏன் வைகோ-வுக்கு கடிதம் எழுத வேண்டும்?''
''அந்தக் கடிதத்திலேயே அவர் ஓர் உண்மையை ஒப்புக்கொண்டு இருக்கிறார். இறுதியில் அவர் எங்களுக்கு ஒதுக்க நினைத்தது வெறும் 12 ஸீட்கள்தான். தேர்தல் புறக்கணிப்பு முடிவை மறுபரிசீலனை செய்யச்சொல்லி ஜெயலலிதா அந்தக் கடிதத்​தில் ஒரு வார்த்தைகூடக் குறிப்பிடவில்லை. 'வை​கோ மீது நன்மதிப்பும் அன்பும் எப்போதும் உண்டு!’ என அம்மையார் எழுதியது, நாடு முழுக்க அவருக்கு எதிராக எழுந்த உணர்வுபூர்வமான கொந்தளிப்பை அடக்க எடுத்த ஆயுதம்! ஆனால், அம்மையாரின் கடிதத்தால் அடங்கிவிடக்கூடிய ஆதங்கமா அது? எரிமலையாக வெடித்துச் சிதறும் எங்களின் அடிபட்ட வலி, அவர்கள் அடிபடும்போதுதான் புரியும்!''

''கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியே தள்ளப்பட்​டதற்குக் காரணம் சசிகலாவின் உறவு வகையறாக்கள்தான் என்கிற பேச்சும் இருக்கிறதே?''
''ஜெயலலிதா அம்மையார் தன்னிச்சையாகவோ, சுதந்திரமாகவோ, எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருப்பதாகப் பலரும் சொல்கிறார்கள். அதை நம்புவதைத் தவிர, எங்களுக்கு வேறு வழி இல்லை!''

''அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விஜயகாந்த்​தோ, இடது​சாரித் தலைவர்களோ கூட்டணி​யில் ம.தி.மு.க-வை நிலைக்கவைக்க முயற்சி எடுக்கவில்​லையா?''
''அவர்கள் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. அதற்குக் காரணம், அ.தி.மு.க. தலைவியைக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் சந்திக்கவோ, கருத்துச் சொல்லவோ முடியாது என்பதுதான். உயரிய பத்திரி​கைகளே அவரிடம் நேரம் வாங்க முடியாமல் அல்லாடுகின்றன. கூட்டணியில் ம.தி.மு.க. நிலைக்க வேண்டும் என யார் நினைத்து இருந்தாலும், இரும்புத் திரை போர்த்திய அந்தத் தலைவியிடம் எப்படிப் பேச முடியும்? அதனால், இதில் யார் மீதும் எங்களுக்கு வருத்தம் இல்லை!''

''17 ஆண்டுகளாகக் களத்தில் இருக்கும் ம.தி.மு.க-வை அவமானப்படுத்தியது ஒரு புறம் இருக்கட்டும்... கடந்த தேர்தலின்போது கட்சி ஆரம்பித்த விஜயகாந்த்துக்கு 41 ஸீட்கள் ஒதுக்கியதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''கொள்கை சார்ந்த அரசியலை எந்த ஆதிக்க சக்தியும் ஏற்பது இல்லை என்பதைத்தான் அம்மையாரின் முடிவு அப்பட்டமாக்குகிறது. லட்சியத்தை மையமாகக்கொண்டும், இளைஞர்களையே மூலதனமாகக்கொண்டும் இயங்கும் ம.தி.மு.க-வைப்போன்ற ஏதாவது ஓர் இயக்கத்தை இந்த இந்தியத் தேசத்தில் உங்களால் உதாரணம் காட்ட முடியுமா? இதைக் கொச்சைப்படுத்துவதில் சிலர் சுகம் காண்கிறார்கள். அந்த சுகம் நிரந்தரமானதாக இருக்காது!''

''வழக்கம்போல் வைகோ உணர்ச்சிவசப்பட்டுப் புறக்கணிப்பு முடிவு எடுத்துவிட்டதாக சிலர் சொல்​கிறார்களே?''
''19-ம் தேதி கட்சியின் உயர் மட்டக் குழுவைக் கூட்டி நண்பகல் 2 மணி வரை தலைவர் வைகோ ஆலோசித்தார். அதன் பிறகு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி அதிகாலை 3.30 மணி வரை ஆலோசித்துத்தான் தேர்தல் புறக்கணிப்பு என்கிற முடிவை தலைவர் ஏகமனதாக எடுத்தார். அவர் உணர்ச்சிவசப்பட்டு இருந்தால், '6 ஸீட்தான்...’ என ஆரம்பித்தபோதே அறுத்துக்கொண்டு வந்திருக்கலாமே... எங்களின் மௌனத்தை இளக்காரம் செய்பவர்களை விட்டுத்தள்ளுங்கள். 1,000 பொதுக்கூட்டங்கள் நடத்தினால்கூட கிடைக்காத எழுச்சியை எங்களின் மௌனம் இப்போது ஏற்படுத்தி இருக்கிறது.''

''தேர்தல் புறக்கணிப்பு என அறிவித்ததால், தி.மு.க-வை வீழ்த்துவதையே லட்சியமாகக்கொண்ட உங்களுக்குப் பின்னடைவுதானே?''
''கலைஞர் மறுபடியும் முதல்வர் ஆவதில் எங்களுக்கு இம்மியளவும் உடன்பாடோ, மகிழ்வோ இல்லை. ஆனால், ஜெயலலிதா இப்படிப் பழிவாங்கிவிட்டாரே என்கிற வேதனை கடைக்கோடித் தொண்டர்கள் வரை நீடிக்கிறது. யாரை வீழ்த்த வேண்டும், யாருக்கு நம் வல்லமையைப் புரியவைக்க வேண்டும், யாரைக் கருவறுக்க வேண்டும் என்பதெல்லாம் ம.தி.மு.க. உறுப்பினர்களின் மனசாட்சிக்கே தெரியும்! இந்தத் தேர்தலில் நிச்சயம் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது. காங்கிரஸ், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் முடிவுகளில்தான் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரியும். இதுவரை தமிழகத்தில் நிகழாத தொங்கு சட்டமன்றம்தான் இந்தத் தேர்தலில் அமையும். அதன் ஆயுள் மிகக் குறைவானதாக இருக்கும். பீகாரைப்போல் மிகக் குறைந்த காலத்துக்குள்ளேயே அடுத்த தேர்தலை தமிழகம் எதிர்கொள்ளும். அப்போது மாற்று சக்தியாக ம.தி.மு.க. வல்லமையோடு களத்தில் நிற்கும்!''

''முதல்வர் கருணாநிதி, 'வரிப் புலியே வருக’ என வைகோ-வை சூசகமாக அழைத்திருக்கிறாரே?''
''கலைஞரின் பாச வலையில் வைகோ ஒரு போதும் சிக்க மாட்டார். எங்களுக்கு ஏற்பட்ட இக்கட்டும், தேர்தலைப் புறக்கணிக்க நாங்கள் எடுத்த முடிவும் தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் ஒரு கௌரவத்தை எங்களுக்கு உருவாக்கி இருக்கிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அனுதாபத்தையும், பொதுமக்களிடத்தில் பச்சாதாபத்தையும், உலகத் தமிழர்கள் மத்தியில் உயரிய நன்மதிப்பையும் உண்டாக்கி இருக்கிறது. இதை அறுவடை செய்ய அவர்கள் முயலத்தான் செய்வார்கள். ஆனால், அவர்களின் எண்ணம் பலிக்காது. இது நாள் வரை நாங்கள் விதைத்தோம். ஆனால், அறுவடை செய்யவில்லை. நாங்கள் நெய்தோம். ஆனால், உடுத்தவில்லை. இனி அப்படி இருக்க மாட்டோம். நாங்கள் விதைத்தை நாங்களே அறுவடை செய்வோம். இதில் ஊடுருவ கலைஞர் நினைத்தாரேயானால், அந்த முயற்சியில் அவர் தோற்பது உறுதி. தான் கொள்ளையடித்து வைத்திருக்கும் சொத்துகள் பறிபோகப் போகிறதோ என்று பயப்படுகிறார் கலைஞர். அதனால், காவல்காரர்களைத் தேடுகிறார். அன்புக் கடிதம் எழுதியவர்களுக்கும், ஆசை அழைப்பு விடுப்பவர்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது... இழவு வீட்டில் களவு கூடாது!''

- இரா.சரவணன், படங்கள்: கே.கார்த்திகேயன்

No comments:

Post a Comment