Wednesday, July 13, 2011

தென் சூடான் உருவானது போல தமிழீழம் உருவாக வேண்டும் - வைகோ


இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை பதிவு செய்துள்ள சி.டி.க்களை மக்களிடம் கொண்டு சேர்க்க, கல்லூரி மாணவர்களுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், தெற்கு சூடான் நாடு புதிதாக உருவாக்கப்பட்டது போல மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி தமிழ் ஈழம் மலர வேண்டும் என்று அவர் கூறினார்.

இலங்கையில் நடந்த போரில் ராணுவத்தால் தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வுகளை பதிவு செய்து தயாரிக்கப்பட்ட சி.டி.க்களை கல்லூரி மாணவர்களிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் வழங்கி வருகிறார்.

சென்னை - தாம்பரத்தில் சென்னை கிறிஸ்துவ கல்லூரி வாயிலில் செவ்வாய்க்கிழமை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களிடம் சி.டி.க்களை வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய வைகோ, "ஈழ தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்த லட்சக்கணக்கான குறுந்தகடுகள் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குறுந்தகடுகளை பார்த்து விட்டு சாப்பிட முடியாது; தூங்க முடியாது; கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது.

சின்னஞ்சிறு பிஞ்சு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டது; பெண்கள் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட அவலம்; தமிழ் இளைஞர்கள் அம்மணமாக இழுத்து வரப்பட்டு கண்கள் கட்டப்பட்டு கைகள் கட்டப்பட்டு சிங்கள ராணுவத்தினர் எட்டி மிதித்து சுட்டு படுகொலை செய்கின்ற கோரக்காட்சிகள்; உண்மையில் நடைபெற்ற சம்பவங்கள்.

அதில் இசைப்பிரியா என்ற இளநங்கை சிங்கள் ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்பதை ஆங்கில தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அதை சிங்கள ராணுவம் மறுத்துள்ளது.

இந்த காட்சிகள் போலிக்காட்சிகள்; புலிகள் அதை செய்தார்கள் என்ற சகிக்க முடியாத பொய்யை சிங்கள ராணுவ பிரதிநிதி கூறியுள்ளார். சிங்கள பெண்ணிடம் விடுதலைப்புலிகள் பாலியல் பலாத்காரம் செய்ததாக இது வரை எந்த குற்றச்சாட்டையும் சிங்களவர்கள் கூட சொன்னதில்லை.

நம் தொப்புள் கொடி உறவுகள் இப்படி கொல்லப்பட்டார்களே என்பதை மாணவர் சமுதாயம் அறிந்து கொள்ள காணொலியை ஒவ்வொரு கல்லூரி வாயிலிலும் நேரில் சந்தித்து கொடுத்துள்ளேன்.

மாணவர் சமுதாயத்தினருக்கு நான் கேட்பதெல்லாம் இந்த குறுந்தகடுகளை உங்கள் சக்திகேற்ப பிரதி எடுத்து மற்றவர்களுக்கு தாருங்கள். ஒவ்வொருவரும் இதை செய்தால் கோடிக்கணக்கான மக்களிடம் இந்த செய்தியை கொண்டு சேர்க்க முடியும்.

நிச்சயமாக இந்த படுகொலைகளை செய்தவன் தப்ப முடியாது. குழந்தைகளையும், பெண்களையும், இளைஞர்களையும் படுகொலை செய்தவன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படுவது உறுதி. கொலைகார ராஜபக்ஷே கூட்டம் தண்டிக்கப்படுவது உறுதி.

இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வுதான். சுதந்திர தமிழ் ஈழ தேசம்தான் தீர்வு. பொது ஜன வாக்கெடுப்பின் மூலமாக தெற்கு சூடான் உருவானது போல தமிழ் ஈழம் உருவாக வேண்டும் என்பதை உலகநாடுகள் முன்வைக்க வேண்டும்," என்றார் வைகோ


Thursday, June 30, 2011

பிரஸ்ஸல்ஸ் பிரகடனம்: வைகோ உரை - வீடியோ


ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் ஈழ மக்கள் அவையின் அனைத்து உலகச் செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'ஈழப் பிரச்னை' குறித்த மாநாடு, ஜூன் 1-ல் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ்சில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் கலந்துகொண்டு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரை, வீடியோ வடிவில்:



நன்றி... மதுரைக்காரன்

Tuesday, June 28, 2011

கடல் அலை ஓய்ந்தாலும் மதிமுகவின் மக்களுக்கான போராட்டம் ஓயாது : வைகோ


மத்திய அரசை கண்டித்து மதிமுக சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை எதிரில் இன்று மாலை (28.6.2011) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ,   இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசினார்.

அவர்,  ‘’விலை வாசி உயர்வு மூலம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி மக்கள் விரோத அரசு என்பதை
நிரூபித்திருக்கிறது.   இவர்கள் உலக அளவில் கச்சா எண்ணை விலை குறைந்திருந்த காலத்தில் கூட இங்கு விலைவாசியை குறைத்தது இல்லை. இப்போதும் அதே காரணத்தைதான் சொல்கிறார்கள்.  கச்சா எண்ணை .உயர்ந்ததால் டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தியதாக சொல்லுகிறார்கள்.

ஆனால் இவர்களுடைய நோக்கம் பெரு முதலாளிகளும், தனியார் எண்ணை நிறுவனங்களும், லாபம் அடைய வேண்டும் என்பதற்காகவே துணை போகிறார்கள்.

இன்னும் சிலர் சொல்லுகிறார்கள்.  விலையை குறைக்க வேண்டும் என்றூ சொல்லுகிறார்கள்.   ஆனால்,  இந்த விலையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பதே மதிமுகவின் கோரிக்கை.

இதனால் நடுத்தர மக்களும் தினக்கூலியாக உழைப்பவர்களூம்,  பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

 மற்ற மாநிலங்களில் விலைவாசியை கட்டுப்படுத்தியை அரசுகள் போல் தமிழகத்திலும் செய்வார்கள் என்று
நம்புகிறோம்.

கடல் அலை ஓய்ந்தாலும் மதிமுகவின் மக்களுக்கான போராட்டம் ஓயாது.   தமிழக மக்களுக்கு எந்த
பிரச்சனை நடந்தாலும்  அங்கு மதிமுக தனது போராட்டத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

தமிழக மக்களுக்காக மதிமுக கடைசிவரை போராடிக்கொண்டே இருக்கும்’’ என்று பேசினார்.

நன்றி... நக்கீரன்

Friday, May 20, 2011

ம.தி.மு.க.,வை யாராலும் வீழ்த்த முடியாது: வைகோ ஆவேசம்


திண்டிவனம்: ""ம.தி.மு.க.,வை யாராலும் வீழ்த்த முடியாது,'' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், ம.தி.மு.க., மாநில பொருளாளர் டாக்டர் மாசிலாமணி இல்லத் திருமணம் @நற்று நடந்தது. விழாவில் வைகோ பேசியதாவது: சென்னையில், வரும் 28ம் தேதி ம.தி.மு.க., பொதுக் கூட்டம் நடக்கிறது. கூட்டு குடும்பத்தில் எத்தனை கோடி ரூபாய் சேர்த்தாலும், ஒற்றுமை இல்லை என்றால் நிம்மதி இருக்காது. அரசியல் குடும்பங்கள் சிலவற்றில் நிம்மதி இல்லை. இது திராவிட இயக்கங்களுக்கு சோதனையான காலக்கட்டம். ம.தி.மு.க.,விற்கு மட்டுமல்ல, அனைத்து திராவிட இயக்கங்களுக்கும் இது சோதனையான காலக்கட்டம். திராவிட இயக்கங்கள் நசித்து போக முயற்சி நடக்கிறது.

ஆளும் கட்சியை தேர்தலில், மக்கள் தூக்கி எறிந்ததற்கு பல காரணங்கள் உண்டு. ஐந்தாண்டுகள் ம.தி.மு.க., பல போராட்டங்களை நடத்தியது. ஆளும் கட்சிக்கு எதிராக பலமான பிரசாரம் செய்தது. தன்மானத்துடன், சுயமரியாதையுடன் தேர்தல் களத்திலிருந்து விலகி நின்றதை தமிழக மக்கள் சரி என்று கூறினர். எத்தனை சீட் கொடுத்தாலும் வாங்கி கொண்டு தேர்தலில் நில்லுங்கள் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். குமுதம், ஆனந்த விகடன், "தினமலர்' வாசகர்கள் கருத்து கணிப்பில், ம.தி.மு.க., முடிவு சரி என்று எப்படி பதிவு செய்தனர். மக்கள் நம்மை ஏற்றுக் கொண்டுள்ளனர். நாம் நேர்மையானவர்கள், கொள்கையுடையவர்கள். இவர்கள் வளர்வது நல்லது என, மக்கள் எண்ணுகின்றனர். இதுதான் கட்சிக்கு அடித்தளம். ம.தி.மு.க.,வை யாராலும் வீழ்த்த முடியாது. நமக்கு வர வேண்டிய சோதனைகள் எல்லாம் வந்து சென்று விட்டன. பூஜ்யத்திற்கு கீழே எதுவும் எடுக்க முடியாது. இனி நமக்கு வெற்றி தான். அ.தி.மு.க., - தி.மு.க., தொண்டர்கள் எங்கள் மீது பாசம் வைத்துள்ளனர். தமிழகத்தை காக்க ம.தி.மு.க., எல்லா வகையிலும் போராடும். இவ்வாறு வைகோ பேசினார்.

நன்றி..தினமலர்

Monday, May 2, 2011

தென் சூடானுக்குப் பிறகு தமிழ் ஈழம் தான்!

பொங்கித் தீர்த்த வைகோ

சிங்கள ராணுவத்தின் பிடியில் இருந்து, வழக்கறிஞர் கயல் என்ற அங்கயற்​ கண்ணியை மீட்டதற்காக, உயர் நீதிமன்ற தமிழ் இலக்கியப் பேரவை, கடந்த 26-ம் தேதி வைகோவுக்கு நன்றி பாராட்டும் விழா நடத்தியது. வழக்கறிஞர்கள் அறிவழகன், இராம.சிவசங்கர், காசிநாதபாரதி ஆகியோர் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்திற்கு, கட்சிகளைக் கடந்து 2,000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். 

விழாவில் பேசிய வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், ''பிரதமரை சந்திக்க என்னையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றார் வைகோ. அது அவசரப் பயணம். குறிப்பிட்ட நேரத்துக்குள் பிரதமர் இல்லம் போய்விட முடியுமா? எனத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே வந்தார். பெற்ற மகளைப் பறிகொடுத்தது போலப் பதைபதைத்தார். பிரதமரை வைகோ சந்தித்த பிறகு, இலங்கை அரசுக்கு நமது வெளியுறவுத் துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர். அதற்குப் பிறகுதான், அங்கயற்கண்ணி விடுவிக்கப்பட்டார்...'' என விவரித்தார்.


அடுத்துப் பேசினார் அங்கயற்கண்ணி... ''எங்​களைக் கைது செய்ததுமே, வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்போவதாக மிரட்டி வந்தார்​கள் இலங்கை அதிகாரிகள். திடீரென அவர்கள் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அன்றுதான் இங்கே, பிரதமரை வைகோ சந்தித்து இருக்கிறார்!'' என்று நெகிழ்ந்தார்.

இறுதியாக மைக் பிடித்தார் வைகோ. ''எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை தமிழர்களின் நலனுக்காகப் பயன்படுத்துவேன். வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, சிங்கள ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டார் என்ற செய்தி கேள்விப்​பட்டபோது, நான் தஞ்சாவூருக்கு காரில் சென்று​கொண்டு இருந்தேன். உடனே, பிரதமருக்கு போனில் தகவல் தெரிவித்தேன். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அன்றுதான் நான் அவரிடம் பேசினேன். காங்கிரஸ் கட்சியின் பிரதமராக எனக்கு அவரைப் பிடிக்காது. மன்மோகன்சிங் என்ற தனி மனிதராகப் பிடிக்கும். 'சிங்கள ராணுவம் பிடித்துவைத்து இருப்பது பாவலர் பெருஞ்சித்திரனார் என்ற தமிழ்ப் புலவரின் பேத்தியை. உடனே, அவர் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், இதற்கான பின் விளைவுகளை மத்திய அரசு சந்தித்தே தீர வேண்டும். இது தொடர்பாக நான் உங்களை சந்திக்க வேண்டும். முடிந்தால், நேரம் ஒதுக்குங்கள்’ என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டேன். சிறிது நேரத்தில், 'மறுநாளே சந்திக்க வரலாம்...’ என, பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது. எனது ஆதங்கத்தை அவரிடம் நேரில் கொட்டினேன். உடனே நடவடிக்கை எடுத்தார்.

இதே மன்றத்தில்தான் ஈழத்தில் நடப்பது என்ன? என்று நான் பேசியதற்காக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இலங்கையில் நடந்தது அப்பட்டமான மனித உரிமை மீறல் என ஐ.நா. குழு இன்று கூறியுள்ளது. ராஜபக்ஷேவும் அவரது கூட்டமும் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

நெஞ்சைப் பிழியவைக்கும் தகவல் ஒன்றை நான் கேள்விப்பட்டேன். ஈழத்தில் போர் நடந்தபோது, ஒரு வீட்டுக்​குள் புகுந்த சிங்கள ராணுவத்​தினர், அங்கிருந்த வயதான தாயையும் கற்பழித்துள்ளனர். பூப்பெய்தி சில நாட்களே ஆன 13 வயது சிறுமியையும் விடவில்லை. இதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. 25 லட்சம் அப்​பாவி​கள் பலியான தெற்கு சூடான் ஜூலை 1-ம் தேதி சுதந்திர தேசமாக, புதிய விடியலுடன் உதயமாகிறது. இந்த விடியல் ஈழத்திலும் நிகழும்.

ஈழப் போர் இன்னும் முடியவில்லை. அதை இயக்குவதற்கு தாய்த் தமிழகம் தயாராக இருக்க வேண்டும். மாவீரன் பிரபாகரன் தோன்ற வேண்டிய நேரத்தில் தோன்றி படையை வழி நடத்துவார். இந்த இயக்கம் இருக்கும் வரை... என் உயிர் ஓயும் வரை.. நான் பிறந்த இந்த மண்ணுக்கும்,  தமிழர்களுக்கும் என்னால் முடிந்த சேவைகளை செய்துகொண்டே இருப்பேன்...'' என்று சீறினார் வைகோ!

- தி.கோபிவிஜய்.. ஜூனியர் விகடனுக்காக.
படம்:   அ.ரஞ்சித்

நன்றி... ஜூனியர் விகடன்

Wednesday, April 20, 2011

ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்!


'உலகக் கோப்பையை இந்தியா​விடம் இழந்த ஆத்திரத்தில், தமிழக மீனவர்​கள் நால்வரின் உயிரைப் பறித்து​விட்டது இலங்கைக் கடற்​படை!’ என்று எழுந்த குற்றச்சாட்டு குறித்து, கடந்த 17.4.11 இதழில் எழுதி இருந்தோம். விக்டஸ் என்ற மீனவர் உடல் மட்டும் இலங்கையில் கரை ஒதுங்கிய நிலையில், மற்ற மீனவர்களின் உடல்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி அந்தோணிராஜ் உடலும், 14-ம் தேதி கை துண்டிக்கப்பட்ட நிலையில் ஜான்பால் உடலும் கிடைத்தன. இரண்டு நாட்கள் கழித்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மாரிமுத்து உடலும் தொண்டி கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கியது. அதாவது கொன்று, கொண்டுவந்து போட்டுள்ளார்கள். சூடு குறையாத நேரத்தில் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற தங்கச்சிமடம் வந்திருந்தார் வைகோ. 

முதலில் விக்டஸின் வீட்டுக்குச் சென்றார். விக்டஸின் மனைவி கிங்ஸ்டாவும், அவரது மூன்று வயது மகள் பெரிலும் கதறி அழ, வைகோவின் கண்களிலும் கண்ணீர்.


\''உயிரைப் பணயம் வைத்து உழைத்தாலும், அதன் மூலம் கிடைக்கும் கஞ்சியைக்கூட நிம்மதியாகக் குடிக்க முடியாத நிலையில் நம் மீனவர்கள் உள்ளனர். நாம் எவ்வளவுதான் போராட்டம் நடத்தி​னாலும், நம் மீனவர்களை சிங்களன் கொன்றுகொண்டே இருக்கிறான். உங்களுடைய துக்கத்திலும் கண்ணீரிலும் பங்கெடுக்கவேவந்து இருக்கிறேன். நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். வேலைக்குப் போன அப்பா திரும்பி வருவார் என நினைத்துக்கொண்டு இருக்கும் இந்தக் குழந்தையினை நன்றாகப் படிக்கவையுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட இழப்பை யாராலும் ஈடுகட்ட முடியாது. ஆனாலும் என்னால் முடிந்த சிறு உதவி'' என சொல்லி 25 ஆயிரத்தை விக்டஸின் மகளிடம் கொடுத்தார்.

அடுத்து ஜான்பால் வீட்டுக்குச் சென்றார் வைகோ. ஜான்பாலுக்கு நான்கு குழந்தைகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் பிறந்துள்ளன. யாருமே இன்னும் ஐந்து வயதை எட்டவில்லை. எதுவுமே அறியாத அந்தக் குழந்தைகள் சூழல் புரியாமல் அப்பாவுக்கு காரியங்களைச் செய்துகொண்டு இருப்பதைக் கண்ட வைகோ கண்கள் சிவக்க, அந்தக் குழந்தைகளைத் தூக்கி அணைத்து கண்ணீர் விட்டார். இந்த நெகிழ்வு அங்கு கூடியிருந்த பெண்களையும் தொற்றிவிட, அனைவரும் வாய்விட்டு அழுதனர். ஜான்பாலின் மனைவி ஜெனிட்டாவுக்கு ஆறுதல் கூறிய வைகோ, அவரிடமும் நிதி அளித்தார்.

இறுதியாக அந்தோணிராஜ் வீட்டுக்குச் சென்ற வைகோவிடம் சகாயம் என்ற பெண், ''காலங்காலமா கடலை நம்பியே வாழுற எங்க புள்ளைங்களோட கதியைப் பாத்தீங்களா? இலங்கைக்காரன் கொன்னு போட்ட நாலு பேரோட குடும்பத்தைப் பாருங்க. புருஷனைப் பறிகொடுத்துட்டு நிக்கிற எங்க புள்ளைகளைப் பாருங்க அய்யா. இந்த கொடுமைக்கு எப்பத்தான் முடிவு வருமோ...'' என்று கதறினார். 19 வயதில் கணவனை இழந்த சோகத்தையும், தனது இரண்டு வயது மகள் ரிமிலாவின் எதிர்காலத்தையும் நினைத்துச் சுருண்டுகிடந்த அந்தோணிராஜின் மனைவி சாலியோவிடம், 'காலம்தான் உன் கண்ணீரைத் துடைக்கும்’ என்ற வைகோ, அவருக்கும் 25 ஆயிரத்தை வழங்கினார். அப்போது, ''சாலியோ ப்ளஸ் டூ படிச்சிருக்கு. அவ​ளுக்கு டீச்சர் டிரெய்னிங் படிக்க ஏற்பாடு செஞ்சா, அவ வாழ்க்கைக்கு உதவியா இருக்கும்’ என சிலர் சொன்னார்கள். உடனடியாக அதனை ஏற்றுக்கொண்ட வைகோ, 'இப்போதே அதற்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று, டீச்சர் டிரெய்னிங் ஸீட் வாங்குவதற்கான நன்கொடை, படிப்புச் செலவு அனைத்தையும் தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார், வைகோ.

கண் கலங்கி நின்ற வைகோ, ''நம் மீனவர்கள் தாக்கப்படும்போது எல்லாம், இந்திய பிரதமரின் கவனத்துக்கு நேரடியாகவும், கடிதம் மூலமும் கொண்டுசெல்வேன். அவரும், இனி அப்படி நடக்காது என பதில் அளிப்பார். ஆனால் மறு நாளே, நம் மீனவர்கள் சிங்களர்களால் தாக்கப்​படுவார்கள். 30 வருடங்களாக இந்தத் தாக்குதல் நடந்துகொண்டே இருக்கின்றன. இலங்கை அரசைக் கண்டித்தோ, ராஜ்ய உறவுகளைத் துண்டிப்போம் என்றோ இந்திய அரசு எச்சரித்தது இல்லை. மாறாக ராஜபக்ஷேவை காமன் வெல்த் போட்டிக்கும், கிரிக்கெட் போட்டிக்கும் அழைத்து மரியாதை செய்கிறார்கள். திருப்பதியில் பூரண கும்ப மரியாதை கொடுக்கிறார்கள். ராஜபக்ஷே இந்தியாவில் இருந்த அன்றைய இரவில்தான், இந்தக் கொடூர சம்பவம் நடந்து இருக்கிறது. இந்திய அரசு... தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் துரோகம் இழைத்து வருகிறது...'' என்று கொந்தளித்தார்.

இதுவே, இறுதி நிகழ்வாக இருக்கட்டும்!

இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி

நன்றி: ஜூனியர் விகடன்

Tuesday, April 19, 2011

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டு இளைஞரொருவர் தீக்குளித்து தற்கொலை

இலங்கைத் தமிழர்களுக்கு நடக்கும் அநீதிகளைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் தமிழ்நாட்டு வாலிபரொருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்திலுள்ள சீகம்பட்டி பிரதேசத்தைச் சோ்ந்த 25 வயது வாலிபரான கிருஷ்ணமூர்த்தி எனும் பொறியியலாளர் ஒருவரே அவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் ஈழத் தமிழ் மக்களுக்குத்  தொடர்ச்சியாக நடக்கும் அநீதிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின் அவர் தன் உடம்பில் பெற்றோலை ஊற்றி தீமூட்டிக் கொண்டு வீதி வழியாக ஓடிச்  சென்ற போது அவரது பெற்றோர் பின்னாலேயே ஒடிச் சென்று தீயை அணைக்க முயன்றுள்ளனர். முடியாமற் போன பின்பு தீக்காயங்களுடன் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆயினும் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபகரமாக மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளார்.

ஈழத் தமிழர் படுகொலைகள் குறித்த ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நெஞ்சை உலுக்கும் கொடூரங்கள் மற்றும் ஈழத்தில் இன்னும் தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் கொடுமைகளால் மனம் வெதும்பி இளம் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி (25) தீக்குளித்து மரணமடைந்தார்.

நெஞ்சைப் பதற வைக்கும் இந்த கொடிய சோகம் நேற்று இரவு நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் அருகே உள்ளது சீகம்பட்டி கிராமம். இங்குள்ள ராமசுப்பு என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (25). பிஇ பட்டப்படிப்பு முடித்து ராஜஸ்தானில் எஞ்ஜினீயராகப் பணியாற்றி வந்தார்.

விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார் இந்த இளைஞர். சிறு வயதிலிருந்தே, ஈழத் தமிழர் விவகாரங்களில் பெரும் அக்கறை காட்டி வந்தாராம். இந்த நிலையில் ராஜஸ்தானில் இவருக்கு எஞ்ஜினீயர் பணி கிடைத்ததும் அங்கு போய்விட்டார்.

விடுமுறையில் ஊருக்குத் திரும்பிய கிருஷ்ணமூர்த்தி, தொடர்ந்து ஈழப் பிரச்சினை குறித்தும், அங்கு இப்போது தொடரும் கொடுமைகள் குறித்தும் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். ஆனால் பெற்றோரிடம் எதுவும் சொல்வில்லையாம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம், இலங்கையில் நடந்த தமிழர் படுகொலைகள் குறித்த ஐநா அறிக்கை வெளியானது. அதில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், ராஜபக்சே அரசு நடத்திய கொலைவெறி தாக்குதல்களைப் படித்து கலங்கிப்போய்விட்டாராம்.

தீக்குளிப்பு
நேற்று அதிகாலை 5 மணி அளவில், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஒவ்வொரு லிட்டராக 3 லிட்டர் பெட்ரோலை, தன் மீது ஊற்றி கொளுத்திக் கொண்டு ஓடினார். அப்போது அவரது தாய், தந்தை மற்றும் சிலர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

ஆனாலும் தன்னுடைய வேதனையை வெளிக்காட்டிக் கொள்ளாத கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் தமிழர்களை கொலை செய்துவிட்டார்கள். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் ராஜபக்சே அரசு கொன்றுவிட்டான். இனி நான் இருந்து என்ன பயன். அதனால் நான் தீக்குளிக்கிறேன். அந்த ராஜபக்சேவை தூக்கில் போடுங்கள்... என்று கதறியபடி கிருஷ்ணமூர்த்தி மயங்கி விழுந்தார்.

உடனே கிருஷ்ணமூர்த்தியை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணமூர்த்தி தான் கைப்பட எழுதிய கடிதம், அவரது குடும்பத்தாரிடம் கிடைத்தது.

அந்தக் கடிதம்:
அன்று ராவணன் செய்த கொடுமையான செயல்களை இன்று சிங்களவர்கள் செய்து விட்டார்கள். அவர்களுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். இலங்கையில் சிங்களவர்களின் இனவெறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அதற்குரிய பலனை பெற்றுத் தர வேண்டும். இலங்கை தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு தனி நாடு என்ற சிறப்பை பெற்றுத் தர வேண்டும்.

அதுவரை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்கக் கூடாது. அப்படி பொறுப்பேற்றால், தயவு செய்து விஷ்ணுவின் பிறப்பு என்று சொல்லிக்கொள்ளும் கோயில்கள் அனைத்தையும் மூடிவிடுங்கள். இந்திய ஆட்சியாளர்கள்தான் இன்றைய சூர்ப்பனகை.

இலங்கை தமிழர்களுக்காக போராடிய போராட்டத்தில் முத்துக்குமாரே சிறந்தவர். இலங்கை தமிழர்களுக்காக போராட மீண்டும் என் ஆஞ்சநேயரை அழைக்கிறேன்.

அப்பா, அம்மா, சீனி, தினகரன் என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு பிறவியில் கொடுக்கப்பட்ட தொழில் இதுதான். இதை நான் செய்யாவிட்டாலும், மிகப்பெரிய குற்றவாளி நான்தான்," இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

வைகோ நேரில் அஞ்சலி
இந்த தகவல் சென்னையில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தெரிவிக்கப்படவே, பத்திரிக்கையாளர்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக கலிங்கப்பட்டி கிராமத்துக்கு வந்த அவர், சீகம்பட்டி கிராமத்துக்கு 19.04.2011 அன்று காலை 9 மணிக்கு வந்தார்.

கிருஷ்ணமூர்த்தியின் உருவப்படத்தை பார்த்தத வைகோ கண்கலங்கினார். உருவப்படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு, மவுன அஞ்சலி செலுத்தினார்.

அப்போது பேசிய வைகோ, "தென்மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள இந்த கிருஷ்ணமூர்த்தியின் தியாகம் வெளியே தெரியாமல் இருந்துவிடக் கூடாது. தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்கிற கிருஷ்ணமூர்த்தியின் உயிர் தியாகத்தின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஐநா சபையால் போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும். அதற்காவது இந்தியா உதவ வேண்டும். இல்லையென்றால் இந்தியாவும் குற்றவாளிதான் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுவேன்," என்றார்.

மேலும் பேசிய வைகோ, "இளைஞர்களே போராடுங்கள், ஆனால் தயவுசெய்து உங்களின் உயிர்களை தியாகம் செய்ய வேண்டாம். கிருஷ்ணமுர்த்தியின் குடும்பத்திற்கு அண்ணன் பழ.நெடுமாறன் மற்றும் அமைப்புகளோடு கலந்து ஆலோசித்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன்," என்றார்.

nanri: தமிழ்வின்