Tuesday, March 22, 2011

அதிமுக அணியில் மதிமுக: இடதுசாரிகள் விருப்பம்

திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை மதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

தொகுதிப் பங்கீடு விஷயத்தில் தமது கட்சி அவமதிக்கப்பட்டதன் காரணமாக, அதிமுக அணியில் இருந்து விலகுவதாக தெரிவித்த வைகோவின் மதிமுக, இந்தத் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று அறிவித்துள்ளது. 

மதிமுகவின் இந்த முடிவு வருத்தம் அளிப்பதாக, வைகோவுக்கு அனுப்பிய கடிதத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இந்த நிலையில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "வரலாறு காணாத ஊழலில் திளைத்து வரும் திமுகவும், காங்கிரஸும் கூட்டணி சேர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், திமுக தலைமையிலான மாநில அரசும் கடைபிடித்து வரும் தவறான பொருளாதாரக் கொள்கையினால் விலைவாசி உயர்வு, விவசாயத்தில் சரிவு, மின்வெட்டு, தொழில் நலிவு, வேலையின்மை போன்ற பிரச்சனைகளினால் மக்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கையை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் மதிமுகவின் பங்களிப்பு முக்கியமானது.

நடக்கவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் ஊழல் கூட்டணியான திமுக - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவது என்பது மக்கள் முன்னுள்ள முக்கியமான கடமையாக உள்ளது. இத்தகைய மகத்தானப் போராட்டத்தில் அதிமுக தலைமையில் தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் உள்ளிட்டு பல கட்சிகள் அணிவகுத்து ஓரணியில் நிற்கின்றன.

திமுக - காங்கிரஸ் கூட்டணியை முறியடிப்பதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் முக்கியமான பங்குள்ளது.

இச்சூழலில் மதிமுக தமிழ்நாடு - புதுவை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று எடுத்துள்ள முடிவு வேதனையளிக்கிறது.

மதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்து அதிமுக தலைமையிலான அணியோடு இணைந்து, ஊழலில் திளைத்து வரும் திமுக - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்திடும் ஜனநாயகப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மதிமுக தலைமைக்கு வேண்டுகோள் விடுக்கிறது," என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜெ.க்கு வேண்டுகோள்...

இதனிடையே, வைகோ பிரச்னையில் ஜெயலலிதா சுமுக தீர்வை உருவாக்கித் தர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம் பெற்று வந்த மதிமுக தற்போது தேர்தலை புறக்கணிப்போம் என்று முடிவு எடுத்திருப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது.

இந்த முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். திமுக- காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க, மதிமுகவும் அதன் பொதுச் செயலாளர் வைகோவும் தாங்கள் எடுத்துள்ள முடிவை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் இதற்கான சுமூகமான தீர்வை உருவாக்கித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment