Thursday, March 24, 2011

தமிழகத்தில் இனி திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மதிமுக அமையும் - வைகோ!

 
"2001ல் திருச்சியில் நடந்த மதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இன்று இயற்கையாகவே நடந்து விட்டது.  தமிழகத்தில் இனி திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மதிமுக அமையும்" என மதிமுக தலைவர் வை. கோபால்சாமி கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களிடம் கலந்தாலோசிக்காமல் ஜெயலலிதா வேட்பாளர்கள் பட்டியலைத் தன்னிச்சையாக அறிவித்தார். இதையடுத்து கூட்டணி கட்சிகள் மூன்றாவது அணி அமைக்க முயன்றன. மதிமுக மட்டும் மவுனம் காத்து வந்தது.

ஜெயலலிதா மீண்டும் கூட்டணி கட்சி தலைவர்களைச் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்து விரும்பும் தொகுதிகள் தருவதாக உறுதியளித்தார்.  புதிய தமிழகம், கம்யூனிஸ்ட்கள், சமக, மமக, மூமுக, கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகளுக்கு விரும்பும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் மதிமுகவுடன் மட்டும் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில் மதிமுக உயர்மட்டகுழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில்  தேர்தலை மதிமுக புறக்கணிப்பு செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது மதிமுகவுக்குக் குறிப்பிடத்தக்க அளவு செல்வாக்கு உள்ள சங்கரன்கோவில்,  கோவில்பட்டி, விளாத்திகுளம், வாசுதேவநல்லூர் பகுதி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதையடுத்து சங்கரன்கோவில் பகுதி தொண்டர்கள், "தேர்தல் புறக்கணிப்பு முடிவை மறுபரீசீலனை செய்யவேண்டும். 30 தொகுதிகளில் தனித்து போட்டியிட வேண்டும். மதிமுக தனித்தன்மையை இழக்காமல் தொடர்ந்து செயல்பட வேண்டும்" என தலைமைக்கு பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பினர். 

இந்நிலையில் நேற்று முன்தினம், வைகோ பாளையங்கோட்டையில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு வந்தார். அங்கு உடல்நலமில்லாத அவரது தாய் மாரியம்மாளைச் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு நள்ளிரவில் சென்றார். அங்கு ஒரு துக்கவீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் அங்குக் கூடிய கட்சி தொண்டர்களிடம் பேசும்போது, "மதிமுக நிலைப்பாடு குறித்து தனியார் தொலைகாட்சியில் விபரமாக பேசிவிட்டேன். 2001ல் திருச்சியில் நடந்த மதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இன்று இயற்கையாகவே நடந்து விட்டது.  தமிழகத்தில் இனி திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மதிமுக அமையும். இந்த முறை மதிமுக தேர்தலில் போட்டியிடாமல் வெளியில் இருந்து கவனிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முடிவு செய்த தேர்தல் புறக்கணிப்பு என்பதில் எந்த மாற்றமும் இல்லை" என்றார்.

No comments:

Post a Comment