Wednesday, April 20, 2011

ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்!


'உலகக் கோப்பையை இந்தியா​விடம் இழந்த ஆத்திரத்தில், தமிழக மீனவர்​கள் நால்வரின் உயிரைப் பறித்து​விட்டது இலங்கைக் கடற்​படை!’ என்று எழுந்த குற்றச்சாட்டு குறித்து, கடந்த 17.4.11 இதழில் எழுதி இருந்தோம். விக்டஸ் என்ற மீனவர் உடல் மட்டும் இலங்கையில் கரை ஒதுங்கிய நிலையில், மற்ற மீனவர்களின் உடல்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி அந்தோணிராஜ் உடலும், 14-ம் தேதி கை துண்டிக்கப்பட்ட நிலையில் ஜான்பால் உடலும் கிடைத்தன. இரண்டு நாட்கள் கழித்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மாரிமுத்து உடலும் தொண்டி கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கியது. அதாவது கொன்று, கொண்டுவந்து போட்டுள்ளார்கள். சூடு குறையாத நேரத்தில் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற தங்கச்சிமடம் வந்திருந்தார் வைகோ. 

முதலில் விக்டஸின் வீட்டுக்குச் சென்றார். விக்டஸின் மனைவி கிங்ஸ்டாவும், அவரது மூன்று வயது மகள் பெரிலும் கதறி அழ, வைகோவின் கண்களிலும் கண்ணீர்.


\''உயிரைப் பணயம் வைத்து உழைத்தாலும், அதன் மூலம் கிடைக்கும் கஞ்சியைக்கூட நிம்மதியாகக் குடிக்க முடியாத நிலையில் நம் மீனவர்கள் உள்ளனர். நாம் எவ்வளவுதான் போராட்டம் நடத்தி​னாலும், நம் மீனவர்களை சிங்களன் கொன்றுகொண்டே இருக்கிறான். உங்களுடைய துக்கத்திலும் கண்ணீரிலும் பங்கெடுக்கவேவந்து இருக்கிறேன். நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். வேலைக்குப் போன அப்பா திரும்பி வருவார் என நினைத்துக்கொண்டு இருக்கும் இந்தக் குழந்தையினை நன்றாகப் படிக்கவையுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட இழப்பை யாராலும் ஈடுகட்ட முடியாது. ஆனாலும் என்னால் முடிந்த சிறு உதவி'' என சொல்லி 25 ஆயிரத்தை விக்டஸின் மகளிடம் கொடுத்தார்.

அடுத்து ஜான்பால் வீட்டுக்குச் சென்றார் வைகோ. ஜான்பாலுக்கு நான்கு குழந்தைகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் பிறந்துள்ளன. யாருமே இன்னும் ஐந்து வயதை எட்டவில்லை. எதுவுமே அறியாத அந்தக் குழந்தைகள் சூழல் புரியாமல் அப்பாவுக்கு காரியங்களைச் செய்துகொண்டு இருப்பதைக் கண்ட வைகோ கண்கள் சிவக்க, அந்தக் குழந்தைகளைத் தூக்கி அணைத்து கண்ணீர் விட்டார். இந்த நெகிழ்வு அங்கு கூடியிருந்த பெண்களையும் தொற்றிவிட, அனைவரும் வாய்விட்டு அழுதனர். ஜான்பாலின் மனைவி ஜெனிட்டாவுக்கு ஆறுதல் கூறிய வைகோ, அவரிடமும் நிதி அளித்தார்.

இறுதியாக அந்தோணிராஜ் வீட்டுக்குச் சென்ற வைகோவிடம் சகாயம் என்ற பெண், ''காலங்காலமா கடலை நம்பியே வாழுற எங்க புள்ளைங்களோட கதியைப் பாத்தீங்களா? இலங்கைக்காரன் கொன்னு போட்ட நாலு பேரோட குடும்பத்தைப் பாருங்க. புருஷனைப் பறிகொடுத்துட்டு நிக்கிற எங்க புள்ளைகளைப் பாருங்க அய்யா. இந்த கொடுமைக்கு எப்பத்தான் முடிவு வருமோ...'' என்று கதறினார். 19 வயதில் கணவனை இழந்த சோகத்தையும், தனது இரண்டு வயது மகள் ரிமிலாவின் எதிர்காலத்தையும் நினைத்துச் சுருண்டுகிடந்த அந்தோணிராஜின் மனைவி சாலியோவிடம், 'காலம்தான் உன் கண்ணீரைத் துடைக்கும்’ என்ற வைகோ, அவருக்கும் 25 ஆயிரத்தை வழங்கினார். அப்போது, ''சாலியோ ப்ளஸ் டூ படிச்சிருக்கு. அவ​ளுக்கு டீச்சர் டிரெய்னிங் படிக்க ஏற்பாடு செஞ்சா, அவ வாழ்க்கைக்கு உதவியா இருக்கும்’ என சிலர் சொன்னார்கள். உடனடியாக அதனை ஏற்றுக்கொண்ட வைகோ, 'இப்போதே அதற்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று, டீச்சர் டிரெய்னிங் ஸீட் வாங்குவதற்கான நன்கொடை, படிப்புச் செலவு அனைத்தையும் தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார், வைகோ.

கண் கலங்கி நின்ற வைகோ, ''நம் மீனவர்கள் தாக்கப்படும்போது எல்லாம், இந்திய பிரதமரின் கவனத்துக்கு நேரடியாகவும், கடிதம் மூலமும் கொண்டுசெல்வேன். அவரும், இனி அப்படி நடக்காது என பதில் அளிப்பார். ஆனால் மறு நாளே, நம் மீனவர்கள் சிங்களர்களால் தாக்கப்​படுவார்கள். 30 வருடங்களாக இந்தத் தாக்குதல் நடந்துகொண்டே இருக்கின்றன. இலங்கை அரசைக் கண்டித்தோ, ராஜ்ய உறவுகளைத் துண்டிப்போம் என்றோ இந்திய அரசு எச்சரித்தது இல்லை. மாறாக ராஜபக்ஷேவை காமன் வெல்த் போட்டிக்கும், கிரிக்கெட் போட்டிக்கும் அழைத்து மரியாதை செய்கிறார்கள். திருப்பதியில் பூரண கும்ப மரியாதை கொடுக்கிறார்கள். ராஜபக்ஷே இந்தியாவில் இருந்த அன்றைய இரவில்தான், இந்தக் கொடூர சம்பவம் நடந்து இருக்கிறது. இந்திய அரசு... தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் துரோகம் இழைத்து வருகிறது...'' என்று கொந்தளித்தார்.

இதுவே, இறுதி நிகழ்வாக இருக்கட்டும்!

இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி

நன்றி: ஜூனியர் விகடன்

No comments:

Post a Comment