Friday, May 20, 2011

ம.தி.மு.க.,வை யாராலும் வீழ்த்த முடியாது: வைகோ ஆவேசம்


திண்டிவனம்: ""ம.தி.மு.க.,வை யாராலும் வீழ்த்த முடியாது,'' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், ம.தி.மு.க., மாநில பொருளாளர் டாக்டர் மாசிலாமணி இல்லத் திருமணம் @நற்று நடந்தது. விழாவில் வைகோ பேசியதாவது: சென்னையில், வரும் 28ம் தேதி ம.தி.மு.க., பொதுக் கூட்டம் நடக்கிறது. கூட்டு குடும்பத்தில் எத்தனை கோடி ரூபாய் சேர்த்தாலும், ஒற்றுமை இல்லை என்றால் நிம்மதி இருக்காது. அரசியல் குடும்பங்கள் சிலவற்றில் நிம்மதி இல்லை. இது திராவிட இயக்கங்களுக்கு சோதனையான காலக்கட்டம். ம.தி.மு.க.,விற்கு மட்டுமல்ல, அனைத்து திராவிட இயக்கங்களுக்கும் இது சோதனையான காலக்கட்டம். திராவிட இயக்கங்கள் நசித்து போக முயற்சி நடக்கிறது.

ஆளும் கட்சியை தேர்தலில், மக்கள் தூக்கி எறிந்ததற்கு பல காரணங்கள் உண்டு. ஐந்தாண்டுகள் ம.தி.மு.க., பல போராட்டங்களை நடத்தியது. ஆளும் கட்சிக்கு எதிராக பலமான பிரசாரம் செய்தது. தன்மானத்துடன், சுயமரியாதையுடன் தேர்தல் களத்திலிருந்து விலகி நின்றதை தமிழக மக்கள் சரி என்று கூறினர். எத்தனை சீட் கொடுத்தாலும் வாங்கி கொண்டு தேர்தலில் நில்லுங்கள் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். குமுதம், ஆனந்த விகடன், "தினமலர்' வாசகர்கள் கருத்து கணிப்பில், ம.தி.மு.க., முடிவு சரி என்று எப்படி பதிவு செய்தனர். மக்கள் நம்மை ஏற்றுக் கொண்டுள்ளனர். நாம் நேர்மையானவர்கள், கொள்கையுடையவர்கள். இவர்கள் வளர்வது நல்லது என, மக்கள் எண்ணுகின்றனர். இதுதான் கட்சிக்கு அடித்தளம். ம.தி.மு.க.,வை யாராலும் வீழ்த்த முடியாது. நமக்கு வர வேண்டிய சோதனைகள் எல்லாம் வந்து சென்று விட்டன. பூஜ்யத்திற்கு கீழே எதுவும் எடுக்க முடியாது. இனி நமக்கு வெற்றி தான். அ.தி.மு.க., - தி.மு.க., தொண்டர்கள் எங்கள் மீது பாசம் வைத்துள்ளனர். தமிழகத்தை காக்க ம.தி.மு.க., எல்லா வகையிலும் போராடும். இவ்வாறு வைகோ பேசினார்.

நன்றி..தினமலர்

No comments:

Post a Comment